குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட வழக்கில் 75,000 ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் கவன குறைவால் பிறந்த பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த குழந்தையின் கட்டை விரலை துண்டித்த அரசு செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த கனேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோருக்கு 4 வாரத்துக்குள் இடைக்கால நிவாரணமாக ரூ. 75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் குழந்தையின் கட்டை விரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்வது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.