அயோத்தியா மண்டபத்தை கைப்பற்ற முனையும் HR&CE அதிகாரிகள்! எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பா.ஜ.க!
சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை , இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றுவதை எதிர்த்து, பா.ஜ.க'வினரும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1954'ஆம் ஆண்டு கட்டப்பட்ட அயோத்ய மண்டபம், ஸ்ரீ ராம சமாஜ் என்ற ஆன்மிக இயக்கம் மூலம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு தினமும் வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதை தரிசிக்க தினமும் பல பக்தர்கள் அயோத்திய மண்டபத்திற்கு வருகை தருகின்றனர்.
அயோத்திய மண்டபத்திற்கு பெரும்பாலான பக்தர்கள் சென்று வருவதால், இதனை இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அறிவிப்பை 2014 'இல் அறிவித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து, மூன்று வாரங்களுக்கு முன்பு நீதிமன்றம், அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றும் இந்து சமய அறநிலையத்துறை எதிர்த்து தொடரப்பட்ட ஸ்ரீராம் சமாஜின் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தை பார்வையிட வருகை தந்தபோது, மண்டபத்தின் நான்கு வாயில்களும் மூடப்பட்டு, சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் தலைமையில், பா.ஜ.க'வினரும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பா.ஜ.க'வினர் மட்டுமல்லாமல், இந்துமத உணர்வாளர்களும் பொதுமக்களும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.