தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!

தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!

Update: 2021-01-08 16:06 GMT

கொரோனா தொற்று வைரஸ் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து பழைய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. புதிய படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது முன்னணி நடிகர்களான விஜய், சிம்பு ஆகியோர்களின் படங்கள் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

இதனையொட்டி நடிகர் விஜய் முதலமைச்சரை சந்தித்து தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் பார்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து சினிமாத்துறையை சேர்ந்தவர்களும் அதே கோரிக்கையை முன்வைத்தனர். இதன் பின்னர் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் வரை தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. 

மேலும், திரையரங்கு விவகாரத்தில் குழந்தைகள் போன்று அரசு மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மூடியிருக்கும் போது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பது சரியல்ல.  உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி ஜனவரி 11ம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையே சேர்த்து விசாரிக்கும் என கூறப்பட்டது.

இதனால் விரைவில் தமிழக அரசு தியேட்டர் விவகாரத்தில் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Similar News