கொரோனாவால் 1000 கோடி ரூபாய் பட்டாசுகள் தேக்கம்.. வேதனையில் உற்பத்தியாளர்கள்.!
கொரோனாவால் 1000 கோடி ரூபாய் பட்டாசுகள் தேக்கம்.. வேதனையில் உற்பத்தியாளர்கள்.!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஒட்டு இந்திய நாட்டிற்கும் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்றால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு உற்பத்தியில் இந்திய அளவில் முக்கிய இடம் வகித்து வருவது சிவகாசி ஆகும். அங்கு 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உற்பத்திகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிட்டது. ஊரடங்குகாலத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் உற்பத்தியை தொடங்கலாம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் மூலப்பொருட்கள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும், ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், தசரா உள்ளிட்ட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடத்தவும் அரசு தடை விதித்தது, இதனால் பட்டாசு ஆர்டர்கள் வரவில்லை.
அனைத்தும் சீராகி ஆலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும் கடந்த ஆண்டைவிட உற்பத்தி குறைவாகவே இருந்தது.
அதே போன்று தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி பணி முடிவடைந்த பின்னர் விடுமுறை அளிக்கப்பட்டு அதனை தொடர்ந்து மீண்டும் 15 நாட்களில் பட்டாசு உற்பத்திக்கான பணிகள் தொடங்குவது வழக்கம் என்று பட்டாசு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நடப்பாண்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளே பெருளவில் தேக்கம் அடைந்துள்ளதால், அடுத்த உற்பத்தி தொடங்குவது கேள்விக்குறியாக உள்ளதாக பட்டாசு உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் பேருக்கான வாழ்வாதாரமாக உள்ள பட்டாசுத் தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.