தஞ்சையில் 1035வது சதய விழா கொண்டாட்டம் - குறைவான பக்தர்கள் அனுமதி!

தஞ்சையில் 1035வது சதய விழா கொண்டாட்டம் - குறைவான பக்தர்கள் அனுமதி!

Update: 2020-10-26 17:33 GMT

தஞ்சையில் 1035 ஆவது சதய விழா குறைவான பக்தர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சதய விழாவில் பங்குகொண்டு ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


மாமன்னன் ராஜராஜசோழனின் 1035வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சையில் சதய விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக காலை மங்கல இசை வாத்தியங்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோயிலை சுற்றி வந்து நந்தி மண்டபத்தில் அமர்ந்து திருமுறைகளை இசைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராவ் அவர்கள் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் ராஜராஜன் சிலைக்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவின் ஒரு பகுதியாக குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பெருவுடையாரையும் அம்மனையும் வழிபட்டனர்.




ஆண்டு தோறும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மக்களும் அரசியல் கட்சி உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News