10, 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை.!
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்திருப்பதால், மாணவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதும், அதற்கான ஏற்பாடுகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சி.பி.எஸ்.இ பிடிவாதம் காட்டுவது நியாயமல்ல.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மே முதல் வாரத்திலும், 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திலும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சி.பி.எஸ்.இ நடத்தும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுவதற்குக் கடந்த வாரம் வரை மாணவ, மாணவிகள் தயாராகவே இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் பல மடங்கு அதிகரித்திருப்பதால், மாணவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் தேர்வு எழுதும்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.