ஒரு கோடிக்கு விற்க முயன்ற 2 சிலைகள் மீட்பு! சினிமா பாணியில் 7 பேரை கைது செய்த போலீஸ்!
மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய்க்கு விற்பதற்காக எடுத்து செல்லப்பட்ட தொன்மையான இரண்டு சிலைகள் மீட்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய்க்கு விற்பதற்காக எடுத்து செல்லப்பட்ட தொன்மையான இரண்டு சிலைகள் மீட்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே உள்ள சித்தாமூர் என்ற இடத்தில் தொன்மையான கோயில் சிலைகளை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீனாட்சி அம்மன் சிலை உட்பட இரண்டு சிலைகளை பறிமுதல் செய்து, ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேலூரில் ரிஷபதேவர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு பேர் சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மீனாட்சி சிலையை ஒரு கோடி ரூபாய் வரை மற்றொரு கும்பலுக்கு விற்க முயன்றது பற்றிய தகவல் கிடைத்ததன் பேரில் மாறுவேடத்தில் சிலையை வாங்குவது போன்று சென்று அவர்களையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
சிலையை வாங்குவதற்கு முன்னர் பத்து ரூபாய் நோட்டை கொடுக்க வேண்டும் என்பதும் அதனை கேள்வியே கேட்காமல் எடுத்து கொடுத்தால்தான் முதற்கட்ட சோதனையில் நம்பிக்கை ஏற்படும், அடுத்ததாக சில கேள்விகளை போலீசாரிடம் கேட்டுள்ளனர். மிக எளிமையான கேள்வி, ஆனால் சரியாக பதில்களை கூறிவிட்டால் அவர்கள் சிலையை வாங்க வந்தவர்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு சிலை கடத்தல் கும்பல் உடனடியாக தப்பிவிடும்.
அதன்பிறகு மூன்றாம் கட்டத்தில் சிலைகளை எப்படி சோதனை செய்வீர்கள் என்றும், இது உண்மையான தொன்மையான சிலைதானா என்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்களுக்கு நம்பிக்கையான பதில் கிடைத்த பின்னரே இந்த கும்பல் சிலையை விற்க முற்படுவதாக கூறியுள்ளது. இது அனைத்தும் முன்கூட்டியே தெரிந்து கொண்ட போலீசார் கடத்தல் கும்பல்களிடம் அதே பாணியில் பேசி வரவழைத்து அவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சினிமாவை மிஞ்சுகின்ற வகையில் அமைந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Polimer