தமிழகத்தில் இன்று 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு.!

தமிழகத்தில் இன்று 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு.!

Update: 2021-01-08 08:41 GMT

நாடு முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 2ம் தேதி தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று இந்த ஒத்திகை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஜன.8ம்) நடைபெறுகிறது.

அதே போன்று தடுப்பு மருந்துகளை சேமிப்பதற்கு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள், தடுப்பு மருந்தை தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிப்பதற்காக கட்டமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன், கொரோனா தடுப்பூசி பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சார்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கை பற்றியும், பொதுமக்களுக்கு தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்படுகிறது என்பவ பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 736 மாவட்டங்களிலும் கொரோனா தடுப்புசி மருந்துக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சியையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் இன்று  ஆய்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக மத்திய அமைச்சர் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு நடத்துகிறார். இதன் பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும், அதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் பார்வையிடுகிறார்.

அதன் பின்னர் தடுப்பூசி ஒத்திகையை பார்வையிடும் மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் இன்று மதியம் 1 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Similar News