தமிழகத்தில் 33.94 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம் - தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.921.99 கோடி நிதி ஒதுக்கியது!
தமிழகத்தில் 33.94 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம் - தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.921.99 கோடி நிதி ஒதுக்கியது!
தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் முதன்மைத் திட்டமான ஜல் ஜீவன் இயக்கத்தினை அமல்படுத்துவது குறித்த இடைக்கால ஆய்வை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் அளவுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் சராசரியாக 126.89 லட்சம் கிராம குடியிருப்புகள் உள்ளன. இதில் 98.96 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.
2020-21-ஆம் ஆண்டில் 33.94 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் அளிக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த இடைக்கால ஆய்வின் வாயிலாக, இதுவரை இணைப்புகள் வழங்கப்படாத 1576 கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பழையத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
நிலத்தடி நீர் புளோரைடால் பாதிக்கப்பட்ட இடங்களில் 236 குடியிருப்புகளில் உள்ள 1.18 லட்சம் பேருக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 22.57 லட்சம் குடியிருப்புகளில் அக்யூட் என்செபாலிடிஸ் சின்ட்ரோம், ஜப்பானிய என்செபாலிடிஸ் ஆகிய தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் உள்ளது. 4.07 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா-வின் கீழ் உள்ள கிராமங்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் அதிகம் உள்ள கிராமங்கள் ஆகியவற்றின் மீது முழு கவனம் செலுத்துமாறு தமிழக அரசை ஜல் சக்தி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2020-21ம் ஆண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.921.99 கோடி ஒதுக்கியது. மாநிலத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.264.09 கோடி நிதி செலவிடப்படாமல் உள்ளது. எனவே, ஏற்கனவே ஒதுக்கப்பட நிதியைக் கொண்டு திட்டத்தை விரைவாக அமல்படுத்தும்படியும், மத்திய அரசிடம் இருந்து மேலும் நிதி பெறுவதை இழக்காமல் இருக்கும்படியும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.