56 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அரசு மருத்துவமனைக்கு வழங்கிய ராமகிருஷ்ண மடம்!
திருப்பத்துர் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ண மடம் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு தொடர்ந்து பல நலத்திட்ட உதவகிளை வழங்கி வருகின்றனர் குறிப்பாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ₹1.25 லட்சம் மதிப்புள்ள 25 படுக்கைகள், போர்வைகள், தலையணைகள் ஆகியவைகளை வழங்கியுள்ளனர். இந்த வகையில் ராமகிருஷ்ண மடம் ₹56 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது.
ஜூன் 8-ஆம் தேதி ஏலகிரி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், ஸ்வாமி பவருபானந்தா மற்றும் தனியார் நிறுவனத்தின் இயக்குனர், பாலகிருஷ்ணன் ஆகியோர் 70 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னிலையில் வழங்கினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது "35 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் மீதம் உள்ள 35 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்படும்" என்று அவர் கூறினார். மேலும் வெண்டிலேட்டர் உபகரணங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக கூறப்பட்டது.