தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 87 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸ்சில் சீட்!

Update: 2022-11-08 13:27 GMT

அனைவருக்கும் ஐஐடிஎம்

'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் (TN) பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 45 மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் படிப்பில் சேருவதற்கான ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 39 பெண்கள் உள்பட 87 மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (Data Science and Applications) நான்காண்டுப் படிப்பில் சேர ஆணைகளைப் பெற்றுள்ளனர். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு இக்கல்வி நிறுவனத்தால் இந்தத் திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

192 மாணவர்களைக் கொண்ட பட்டியல்

தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற ஐஐடி மெட்ராஸ்-ன் உயரிய நோக்கை நடைமுறைப்படுத்தும் வகையில், பொதுக் கல்வித் திட்டத்தில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்முயற்சிகளில் ஒன்றாக 'அனைவருக்கும் ஐஐடிஎம்' (IIT Madras for All) திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. மனப்பாடம் இன்றி கற்றல் திறமையை வெளிக்கொணரச் செய்யும் வகையில் அவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ்-ல் 14 வாரங்கள் நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டு, பிஎஸ் பட்டப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வை எழுத 68 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குறைந்த செலவில் தரமான கல்வி

குறைந்த செலவில் தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஐஐடி மெட்ராஸ், பிஎஸ் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை வருமான அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. மேலும், தகுதியுடைய மாணவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) கூட்டு முயற்சியுடன் தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியைப் பெற முடியும்.

கல்வி கற்கும் மாணவர்கள் சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று பல்வேறு நிலைகளில் வெளியேற ஏதுவாக இந்தப் பாடத்திட்டம் கவனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கல்வி கற்போர் என்ன சாதிக்க விரும்புகிறார்களோ அதற்கேற்ப முடிவுகளை தாங்களே எடுக்க ஏதுவாக இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு மிகவும் அவசியமான தொழில்துறை தொடர்பான அறிவு மற்றும் திறன்களை இப்பாடத் திட்டம் வழங்குகிறது. மேலும், பிஎஸ் பட்டம் பெற்ற மாணவர்கள் GATE தேர்வு எழுதத் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எம்டெக் படிப்பைத் தொடரவோ அல்லது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவோ செய்யலாம்.

Input From: NEindia

Similar News