கொடைக்கானலில் ஒரு கூவம் ஆறு உருவானது.. கவலையில் சுற்றுலாவாசிகள்.!

கொடைக்கானலில் ஒரு கூவம் ஆறு உருவானது.. கவலையில் சுற்றுலாவாசிகள்.!

Update: 2020-12-15 17:26 GMT

கொடைக்கானல் சென்றாலே முதலில் அந்த பெரிய ஏரிக்குதான் அனைத்து சுற்றுலா பயணிகளும் செல்வார்கள். ஆனால் தற்போது அந்த அழகிய ஏரி சென்னையில் உள்ள கூவம் நதி போன்று துர்நாற்றம் வீசுவதாக கொடைக்கானல் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வது சுற்றுலா பயணிகளின் வழக்கம். தற்போது நட்சத்திர ஏரியை சுற்றி நீர் தாவரமான பிஸ்டியா வளரத் தொடங்கியுள்ளது. இந்த தாவரம் ஏரி முழுவதும் பரவியதால், நட்சத்திர ஏரி பொழிவு இழந்து காணப்படுகிறது. பிஸ்டியா நீர் தாவரம் வளரும் நீர் நிலைகளில் பிற நீர் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கும்.

தண்ணீரிலும் பிராண வாயு குறைந்து மீன்களும் இறந்து போகும் வாய்ப்பு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த ஏரியை சுற்றிலும் உள்ள ஓட்டல்களின் கழிவு நீர் இந்த ஏரியில்தான் வந்து கலக்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஏரியில் ஆங்காங்கே மதுப்பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. நட்சத்திர ஏரியை சுத்தம் செய்வதற்கு பல லட்சம் மதிப்பில் சுத்தம் செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதாகிப் போனது.

நான்கு வருடங்களுக்கு முன்பு அந்த இயந்திரமே இங்கிருந்து காணாமல் போய் விட்டது. எனவே ஏரியை சுற்றியுள்ள செடி, கொடிகள், நீர் தாவரங்கள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் நகர மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News