ரயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்து கொண்ட வாலிபர்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு.!
ரயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்து கொண்ட வாலிபர்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு.!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் ரயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பார்த்திற்கு வந்து நின்றது. அப்போது அதே ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் அந்த ரயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
இதனை அறிந்த என்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் அனைவரும் அவரை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபர் இறங்க மறுத்து என்ஜின் மீது அமர்ந்து கொண்டே இருந்தார். இதனால் செய்வதறியாமல் இருந்த என்ஜின் டிரைவர் இது பற்றி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலை தொடர்ந்து அந்த ரயில் செல்லும் பாதையில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
இதன் பின்னர் அவரை கீழே இறங்க சொல்லியும் இறங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து ரயில்வே போலீசார் மேலே சென்று வாலிபரை மடக்கி பிடித்து கீழே இறக்கினர். இதன் பின்னர் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் எனவும், அவரது பெயர் விவேக் என்பதும் தெரியவந்தது.
மேலும், சாதாரண டிக்கெட் எடுத்துவிட்டு, முன் பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் கோச் பெட்டியில் பயணம் செய்து வந்துள்ளார். இதனால் டிடிஆர் அந்த வாலிபருக்கு ரூ.850 அபராதம் விதித்தாக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் ரயில் என்ஜின் மீது ஏறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாலிபருக்கு உணவு வாங்கி கொடுத்த ரயில்வே போலீசார், அடுத்த ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்ற ரயில்கள் சுமார் 20 நிமிடம் காலதாமதமாக சென்றது.