கைது செய்தவர்களை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் ஸ்டாலின் வீடு முற்றுகை: ABVP எச்சரிக்கை!
சென்னையில் கைது செய்த ஏபிவிபி நிர்வாகிகளை விடுதலை செய்யவில்லை எனில் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஏபிவிபி மாநில நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதும் பாஜக மற்றும் ஏபிவிபி அமைப்பும் போராடி வருகிறது.
இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மதமாற்றம் தடை சட்டம் கொண்டுவர வேண்டும், மாணவி லாவண்யாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து ஏபிவிபி அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு பிப்ரவரி 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னையில் ஏபிவிபி மாநில நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும்போது, லாவண்யா தற்கொலை தொடர்பாக நீதிகேட்டு ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்ட ஏபிவிபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நாடு முழுவதும் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏபிவிபி குரல் கொடுக்கும். எனவே ஸ்டாலின் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: Facebook