அரசு கிடங்கில் பயனற்று கிடக்கும் அம்மா மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள்! தி.மு.க ஆட்சியின் காழ்ப்புணர்ச்சி காரணமா?
புதுக்கோட்டையில் மக்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், அரசு கிடங்கில் பயனற்று கிடப்பது, தி.மு.க அரசின் காழ்ப்புணர்ச்சியை எடுத்துக்காட்டும் உதாரணமாக அமைகிறது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சிறந்த திட்டங்களில் ஒன்று, ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விலையில்லா அம்மா கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் ஆகும். இவை ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரும் உதவிகரமாக அமைந்தது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்கு வழங்கவிருந்த விலையில்லா கிரைண்டர் மற்றும் மின்விவிசிறிகளின் விநியோகம் சில அரசியல் காரணங்களால் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்பொழுது புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் மக்களுக்கு பயனற்ற வகையில் கிடப்பது வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியின் மற்றொரு மகத்தான திட்டமான அம்மா உணவகங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது புகைப்படங்களை அகற்றும் முயற்சிகள் நடந்தேறி வரும் நிலையில், இப்பொழுது அ.தி.மு.க ஆட்சியின் மற்றொரு சிறந்த திட்டமான விலையில்லா மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம், முழுமையாக மக்களிடம் சென்றடைய வைக்காமல் தி.மு.க அரசு தடுத்து வருகிறதா என்ற கேள்விகளும் எழுகிறது.