வன்னியர்களையும், பட்டியல் இனத்தவர்களையும் இழுத்துவிட்டு குளிர்காய நினைக்கலாமா ?- நடிகர் சூர்யாவுக்கு ஏர்போர்ட் மூர்த்தி எச்சரிக்கை!

ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் இதுநாள் வரை தயாரிப்பாளரும் அதன் கதாநாயகனுமான சூர்யா மட்டுமே படக்குழு சார்பில் பதில் அளித்து வந்தார். 21.11.2021 படத்தின் இயக்குனர் ஞானவேல் சர்ச்சையான காட்சி அமைப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மாட்டப்படும் காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என்று படப்பிடிப்பின் போதும் ''போஸ்ட் புரொடக்ஷன்'' போதும் இது கவனத்தில் பதியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Update: 2021-11-22 13:48 GMT

புரட்சித் தமிழகம் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் இதுநாள் வரை தயாரிப்பாளரும் அதன் கதாநாயகனுமான சூர்யா மட்டுமே படக்குழு சார்பில் பதில் அளித்து வந்தார். 21.11.2021 படத்தின் இயக்குனர் ஞானவேல் சர்ச்சையான காட்சி அமைப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மாட்டப்படும் காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என்று படப்பிடிப்பின் போதும் ''போஸ்ட் புரொடக்ஷன்'' போதும் இது கவனத்தில் பதியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 


இந்த பதில் சினிமாவைப்பற்றியோ எடுக்கின்ற முறைகளை பற்றியோ தெரியாதவர்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் நடைமுறை படப்பிடிப்பில் ஒரு கதாபாத்திரத்தை நோக்கி கேமரா வைக்கின்றபோது சினிமா பாணியில் ''பிரேம்'' வைக்கிறபோது கதாபாத்திரத்திற்கும் கேமராவிற்கும் உள்ள இடைவெளி அளிக்கப்படும். கதாபாத்திரத்தின் உடை கலருக்கு ஏற்ப ''பேக்ரவுண்ட்'' எனப்படும் பின்னால் உள்ள கலர் மேட்ச் செய்யப்படும். அதைப் போல அவரை நோக்கி கேமரா இருக்கும்போது அவர் பின்னணியில் என்னென்ன பொருட்கள் சினிமா பாணியில் ''ப்ராப்பர்ட்டீஸ்'' இருக்க வேண்டும். அவை அனைத்தும் அந்த பிரேமுக்குள் வைப்பார்கள். காட்சி (டேக்) எடுத்தவுடன் அதன் தொடர்ச்சி அதாவது ''கன்டினுட்டி'' இருந்தால் என்ன ''ப்ராப்பர்ட்டி'' அந்த ஷார்ட்டில் வைத்தார்களோ அதையே அந்தந்த இடத்தில் கவனமாக வைப்பார்கள். இதை இயக்குநர் சொல்வார். அவர் சொல்லுகின்ற ப்ராப்பர்டிகளை ஏற்பாடு செய்வதற்கென்றே ஆர்ட் டைரக்டர் உடனிருப்பார். இந்த கன்டினுட்டி கவனிக்க இயக்குநர் பல உதவி இயக்குநர்களை உடன் வைத்திருப்பார். படப்பிடிப்பின்போது மானிட்டர் என்பார்கள் நேரடி படப்பிடிப்பை டி.வி. போன்ற ஸ்கீரினில் பார்த்து பிரோமுக்குள் எல்லாம் அடங்குகின்றதோ அந்தந்த ப்ராப்பர்டி இருந்தபடியே அங்கங்கு சரியாக மேட்ச் ஆகி வருகிறதா என உறுதிப்படுத்தி ஷார்ட்டின் இறுதி வடிவம் உறுதி செய்யப்படும்.


முக்கியமான ஷார்ட்டுகளை எடுப்பதற்கு இரண்டு நாட்கள் கூடப் பிடிக்கும். அதுவரை இவையெல்லாம் பின்பற்றப்படும். இப்படி இருக்கையில் இது ஏதேட்சையாக வந்தது. இது கவனத்தில் பதியவில்லை என வெற்றிமாறன் சொல்வது உண்மைக்கு புறம்பானது. காலண்டரில் உள்ள இலட்சனை குறிப்பிட்ட சமூக மக்களின் சங்க பதிவில் உள்ள இலட்சனை. அவர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட பெயரும் அவர்களால் பின்பற்றப்படுகிற நபரின் பெயர். இது எல்லாம் எதேட்சயாக வந்ததென்றால் ஏற்க இயலாது.

முதலில் ஒரு படத்திற்கு பெயர் வைப்பது என்பது கதையை ஒட்டி இருக்கும் அல்லது கதையில் வரும் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இருக்கும். இதுதான் இயல்பு. இந்த படத்தில் நடக்கும் கதைக்களம் அதில் நடக்கும் மக்கள் போராட்டத்தில் காட்டப்படும் கொடி குறியீடுகள் எதுவுமே அம்பேத்கர் சார்ந்து இல்லை. அல்லது படத்தில் அம்பேத்கர் இயக்கம் சார்ந்து மக்களில் ஒரு பிரிவு இருந்தது. அல்லது அம்பேத்கர்வாதிகளாக ஒரு சிலர் காட்டப்பட்டு மக்களுக்கு போராட்ட வடிவு நிகழ்வுகள் காட்டப்பட்டிருப்பினும் இந்த பெயர் பொருத்தமாக இருக்கும். 


வேறு ஏதாவது ஒரு பெயரை வைத்திருந்தால் அந்த பெயர் இந்த படம் எடுக்கப்பட்ட பன்மொழிகளில் மக்களுக்குத் தெரியும் என்ற உள்நோக்கத்தோடு ஒரு உண்மை சம்பவத்தை சில ''கமர்சியல்'' இணைப்புகளை வைத்து திசை திருப்பி பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக வெற்று விளம்பர அரசியலுக்காகவே காத்துக் கிடக்கும் அன்புமணி இராமதாஸ் போன்றோர்களுக்கு தீனி போட்டு அதன் மூலம் சர்ச்சை உருவாகி எதிர்ப்பு ஆதரவு என்று மோதல் போக்கு உருவாகவே திட்டமிட்டு இந்த பெயர் இங்கு வைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அன்புமணி போன்றோர் தரப்பிலிருந்து கொளுத்துவோம், தாக்குவோம் என்பதெல்லாம் மிகவும் தவறானது கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வுகள் நடக்குமானால் ஜனநாயக நாட்டில் எவரும் சுதந்திரமா வெளியே நடமாட முடியாது என எச்சரிக்கை செய்கிறோம்.

வெறும் நடிகராக சூர்யா இருந்திருந்தால் மேற்கண்ட உள்ளிருப்பு வேலைகள் தெரிய வாய்ப்புக் குறைவு. ஆனால் தயாரிப்பாளரும் அவர் என்ற முறையில் இது ஒரு கூட்டு வியாபார சூழ்ச்சி வேலையாகவே இருக்க வாய்ப்பு அதிகம். பல நல்ல காரியங்களை சூர்யா செய்து வருகிறார் என்பதற்காக தமிழ் குடிகளுக்குள் பட்டியல் சமூக மக்களையும், வன்னியர் சமூக மக்களையும் ஜெய்பீம் என்ற படத்தின் பெயரை வைத்து முரண்பாடுகளை தூண்டிவிட்டு வியாபாரத்தை சூடுபடுத்தி அமேசான் நிறுவனத்திற்கு பன்மடங்கு லாபத்தை அதிகரித்து தனது அடுத்த படத்திற்கு மார்க்கெட் விலையை ஏற்றிவிட்டு, லாபம் ஈட்டலாம் என்று சூர்யாவின் கனவு பலிக்காது. இது தவறானது.

மேலும், அடித்தட்டு மக்களுக்கு எதிராக குறிப்பிட்ட சமூக மக்களில் சிலர் இருக்கிறார்கள். எனவே சில குறியீடுகள் மூலம் அதைக் கண்டித்து வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற வாதத்தை நீங்கள் முன்வைக்க நினைத்தால் கம்மாபுரம் பண்ருட்டி வட்டத்தில் சிறுதொண்டமாதேவி காலனியில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளில் புகுந்து பெண்களை இழுத்து பொது வெளியில் வைத்து பாலியல் வல்லுறவு வன்கொடுமை செய்வது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் அம்மக்களின் அவலங்களை அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம் ஏசுமரியான் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரிடையாக வாக்குமூலம் எடுத்து சி.டி. வடிவில் வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களால் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டு அரசிடமும் ஆணையங்களிலும் 15.04.2003ல் புகாரும் வைக்கப்பட்டது. நெஞ்சை உறைய வைக்கும் உண்மைக்கதையை படமாக்கினேன் என்று சொல்கிற சூர்யா தரப்பு சிறுதொண்டாமாதேவி சம்பவத்தை என்ன செய்ய போகின்றீர்கள் என்று அறிய ஆவலாய் உள்ளோம். இந்த பகுதிக்கு கள ஆய்வுக்கு சென்ற நக்கீரன் நிரூபர் நேரடியாக ஒரு காட்சியைப் பார்த்து உலகில் எங்கிலும் இதுவரை இதுபோல சம்பவத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. நேரில் பார்த்து அதிர்ச்சியானேன் என பதிவு செய்துள்ளார்.

எனவே புரட்சி தமிழகத்தின் சார்பில் சென்னை காலநிலை சரியானவுடன் விரைவில் சூர்யாவின் தி.நகர் வீட்டிற்கே சென்று மேற்கண்ட காட்சிகள் அடங்கிய சி.டி.யை சூர்யாவிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். சூர்யா அவர்கள் இந்த உண்மை சம்பவத்தை படமாக தயாரித்து சமூக அவலங்களை தோலுரித்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இதனை திரைப்படமாக தயாரிக்க வலியுறுத்துவோம். சி.டி. கொடுக்கின்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Image Courtesy: Pipa News

Tags:    

Similar News