தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் வைரஸ் தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு முழு ஊரடங்கு தான் ஒரே வழி எனும் நிலையில், அதை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது மிகப்பெரிய கடமை தவறுதல் ஆகும்.
பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் வைரஸ் தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு முழு ஊரடங்கு தான் ஒரே வழி எனும் நிலையில், அதை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது மிகப்பெரிய கடமை தவறுதல் ஆகும்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 23,310 ஆகும். இவர்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் மருத்துவம் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் முறைப்படி சோதனை நடத்தி அடையாளம் கண்டறியப்பட்டவர்கள் தான். சோதனை செய்யப்படாமல் கொரோனா தொற்றுடன் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நடமாடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பது தான் ஒரு மருத்துவராக எனது மதிப்பீடு ஆகும். கொரோனா அவ்வளவு வேகமாக பரவிவருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம் இருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 150-ஐக் கடந்து விட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 13 பேர் நேற்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து விட்டனர். தமிழ்நாட்டில் சென்னை தொடங்கி அனைத்து நகரங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது சாதாரணமான ஒன்றாகி விட்டது. பெரும்பாலான உயிரிழப்புகள் உண்மையான காரணம் கூறப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு காரணம் மருத்துவமனையில் மருத்துவம் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான்.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்காமல் நிலைமையை முன்னேற்ற முடியாது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்து, அதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தான். முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய முடியும். அதன்பின்னர் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன்மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து ஆக்சிஜன் - ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்கி, உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவரலாம்.