தேர்வு முடிவுகளை நிறுத்திய அண்ணா பல்கலைக்கழக முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: டாக்டர் ராமதாஸ்.!
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் 30 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் 30 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 70% மாணவர்களில் பெரும்பகுதியினர் தோல்வியடைந்து விட்டதாகவும், முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம் பயிலும் மாணவ, மாணவியருக்கான பருவத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் பயிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதினார்கள்.
இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 % மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததாக தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 30% மாணவர்கள் தேர்வு எழுதும் போது 3 வகையான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களின் முடிவுகளை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுகள் அதிர்ச்சியை மட்டுமின்றி பல்வேறு வகையான ஐயங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. 30% மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடு செய்ததாகக்கூறி அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. கொரோனா அச்சம் காரணமாக இம்முறை அண்ணா பல்கலை. இணைய வழியில் தேர்வு நடத்தியது. இத்தேர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட மையங்களில் நடத்தப்படாமல், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டனர். அதன்படி மாணவர்கள் எதேச்சையாக திரும்பினால் கூட, அவர்கள் விடைகளைப் பார்க்க திரும்பியதாகக் கருதி அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களை குற்றவாளிகளாக பார்ப்பது பெருந்தவறு ஆகும்.