லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2000 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் பெண் அதிகாரி சிக்கினார்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா 57, வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா 57, வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். தந்தை பெரியார் பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி தனது பணிகளை பார்த்த வருகிறார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கடலூர், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற பணிகள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்நிலையில், மண்டல செயற்பொறியாளர் ஷோபனா லஞ்சம் வாங்குவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு முதல் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது காரில் சோதனை செய்தனர். அப்போது 5 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கு அவரிடம் கணக்கு இல்லாமல் இருந்ததால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கி உள்ள அறையில் சோதனை நடத்தினர். அப்போது ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் பணம் மற்றும் ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவருடைய அலுவலகத்தில் சோதனை செய்ததில் 18 ஆவணங்கள் கிடைக்கப்பெற்றது. அதனையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது ஓசூர் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு சுமார் 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் 300 ரூபாய் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 38 சவரன் தங்க நகைகள், 11 வங்கி கணக்குகள், வங்கி லாக்கர் சாவி, வெள்ளி உள்ளிட்டவைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு அதிகாரி வீட்டில் இத்தனை கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அரசு அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Daily thanthi