ஆரணியில் மரத்தடியில் தகர செட் போட்டு சிகிச்சை.. கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழப்பு.!
ஆய்வு செய்த அதிகாரியின் கண் முன்னே ஒரு கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
ஆரணியில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவருக்கு அனுமதியின்றி மரத்தடியில் தகர செட் அமைத்து சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றியும் திறந்த வெளியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், அதிகமான கட்டணம் வசூல் செய்து வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த அதிகாரியின் கண் முன்னே ஒரு கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் சிவரஞ்சனி. இவர் ஆரணி பேருந்து நிலையம் எதிரே குழல் என்ற தனியார் கிளினிக்கை நடத்தி வருகிறார். இவர் அரசு அனுமதியின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இது பற்றி பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பேருந்து நிலையம் எதிரே இருந்த ஒரு காலி இடத்தை வாடகைக்கு எடுத்து தகர சீட்டால் ஒரு செட் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனிடையே ஒருவர் சிகிச்சை பலனின்றி அதிகாரிகள் கண்முன்னே துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.