8 லட்சம் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் பட்டாசுத் தடை - ₹ 800 கோடி நஷ்டம்.!
8 லட்சம் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் பட்டாசுத் தடை - ₹ 800 கோடி நஷ்டம்.!
ஏற்கனவே நாட்டின் பல நகரங்களில் காற்று மாசுபாட்டை காரணமாக காட்டி தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கி இருக்கிறது. ஊரடங்கால் சிவகாசி பட்டாசுத் தொழில்
கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டாசு புகை மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் என்று கூறி பல மாநிலங்களும் தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்து வருவது சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களின் தலையில் இடியாக விழுந்திருக்கிறது.
இதனால் இந்தத் தொழில் துறைக்கு இந்த வருடம் 800 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படும் என்றும் இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபடும் சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கு இந்த இழப்பு பேரிடியாக அமையும்.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே பட்டாசுகளுக்கான தேவை 35 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் கோவா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் வழக்கமாக விநாயகர் சதுர்த்தி சமயத்தில் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கும் வழக்கம் இந்த ஆண்டு இல்லாததாலும் திருவிழாக்களும் திருமணங்களும் ரத்து செய்யப்பட்டதாலும் சிவகாசி பட்டாசு தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது என்ற பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த வருடமே பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டது, பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுஃ இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு திட்டம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் ஏற்பட்ட குளறுபடி ஆகியவை தொடர்ச்சியாக பட்டாசு தொழிலை ஒன்றன்பின் ஒன்றாக பாதித்து வருவதாக இந்த துறையை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.