சிறுவாச்சூர் தொடர் சாமி சிலை உடைப்புக்கு, மத மாற்ற கும்பல் காரணமா ? பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் கூறுவதென்ன ?

Update: 2021-11-24 11:22 GMT

பெரம்பலூர் : "சிறுவாச்சூர்  தொடர்  சாமி சிலைகள் உடைப்புக்கு பின்னால் மத மாற்ற கும்பல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது"  என்று  பா.ஜ.க வழங்கறிஞர் பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சாமி உருவ சிலைகள் தாக்கப்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும் மனவேதனையை அளித்துவருகிறது. சாமி சிலைகள்  உடைப்புக்கு பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு மற்றும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலையின் அறிவுறுத்தல் படி  அக்கட்சியின்  வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் இரண்டு முறை சிறுவாச்சூர் சென்று  ஆய்வு செய்துள்ளார். பின்னர் தொடர் சாமி சிலைகள் உடைப்பு பற்றி அவர் கூறியதாவது: சிறுவாச்சூர் மலை பகுதியில் மர்மமான முறையில், ஏதோ நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழக அரசும், காவல் துறையும், சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆதங்கப்பட்டனர். 

இதையடுத்து, இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தான், செப்., 26ல் மீண்டும் மலை கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. பல சிலைகள், பீடம் வரை தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. பெரியசாமி, பைரவர், செங்கமலை, அய்யனார் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன.

அடுத்து நவ., 8ம் தேதி இரவும், அதே கோவிலில் மிச்சம் இருந்த சாமி சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்த சாமி சிலைகள், முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன. சிறுவாச்சூர் சம்பவம் போலவே, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரசிம்மராவ், 128 கோவில்களில் சிலைகள் தாக்கப்பட்டது குறித்து, பார்லிமென்டில் பேசினார்.

அதன்பின், ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது. விசாரணையின் முடிவில், மதமாற்ற அடிப்படைவாத சக்திகள், சாமி சிலை உடைப்பு மற்றும் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர். ஆந்திராவை அடுத்து, தற்போது தமிழகத்திலும் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற  தாக்குதல் பின்னணியிலும் மதமாற்ற அடிப்படைவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதை போலீசாரிடமும் தெரிவித்துள்ளோம்.

வனத் துறைக்கு சொந்தமான அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும், சிறுவாச்சூர் கோவில்களுக்கு பகல் நேரத்தில் செல்வதே சவாலான விஷயம். அப்படி இருக்கையில், சிலைகள் உடைப்பில் அனுபவம் பெற்றவர்களால் தான் இதை செய்திருக்க முடியும். ஆந்திராவில் கோவில்களை தாக்கிய அதே கும்பலே கூட இதை செய்திருக்கக்கூடும். அதனால், இதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளன. இதன் பின்னணியில் மர்மம் இருப்பது மட்டும் தெரிகிறது.

மனநிலை பாதித்த ஒருவர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதோடு, தனியொருவன் மட்டும் சிறுவாச்சூர் கோவில் சிலை உடைப்பில் ஈடுபட்டிருக்க முடியாது. சிலை உடைப்பில் கைதேர்ந்த கும்பல் தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். அடுத்த கட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Dinamalar


Tags:    

Similar News