திருப்பதியை இழிவுபடுத்தி படம் தயாரித்தவர் தேவஸ்தான பதவியில் நீடிக்கலாமா.?
திருப்பதியை இழிவுபடுத்தி படம் தயாரித்தவர் தேவஸ்தான பதவியில் நீடிக்கலாமா.?
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஐசரி கணேஷ் இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் திருப்பதி கோவிலைப் பற்றியும் வெங்கடாஜலபதி பற்றியும் தரக்குறைவான கருத்துக்களைக் கூறும் மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்தற்காக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து தீபாவளி அன்று வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் குல தெய்வத்தை வேண்டுமென்றே புறக்கணித்து திருப்பதிக்கு செல்ல கதாநாயகனின் குடும்பம் விரும்புவது போலவும் லட்டுக்காக தான் திருப்பதி செல்கின்றனர், பக்தியில் இல்லை என்றும் அம்மனே கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஏற்கனவே இந்து மதத்தையும், மத குருக்களையும் மட்டும் குறிவைத்து தவறான தகவல்களை எடுத்துரைக்கும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக மூக்குத்தி அம்மன் படத்துக்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், தற்போது திருப்பதி கோவிலை பற்றி தரக்குறைவாக பேசிய படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
"திருப்பதி பெருமாள் மீது நம்பிக்கை இல்லாது லட்டு கொடுப்பதால் கூட்டம் வருகிறது பழனி பஞ்சாமிர்தம் கொடுப்பதால் கூட்டம் வருகிறது என்று கொச்சைப்படுத்த கூடிய ஐசரி கணேசன் என்பவரை ஆலோசனை குழு உறுப்பினராக வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?" என்று இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார், திருப்பதி பெருமாள் கோவிலையும் திருப்பதி பெருமாளை வணங்க கூடிய பக்தர்களின் பக்தியையும் கொச்சைப்படுத்தி படமெடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேசனை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.