மத்திய அரசின் ஏற்பாட்டால் 3 நாள் டிஜிட்டல் கண்காட்சி: அறியப்படாத சுதந்திர வீரர்கள் குறித்து அறிய வாய்ப்பு!
மத்திய அரசின் சிறப்பு ஏற்பாட்டின் காரணமாக அறியப்படாத சுதந்திர வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சிறு தானியங்கள் குறித்த டிஜிட்டல் கண்காட்சி.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023 குறித்த மூன்று நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் சார்பாக திண்டுக்கல் ஜான் பால் மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு.எம்.அண்ணாதுரை ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விழா அரங்கில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகள் புகைப்படக் கண்காட்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களைப் பார்வையிட்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது. மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் திரு. எம். அண்ணாதுரை பேசுகையில், அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறுவதாகக் கூறினார்.
இங்கு புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் நாட்டுக்காக உழைத்து சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். நமக்காக உழைத்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அது நம்முடைய கடமை என்று கூறிய அவர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் குறித்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Input & Image courtesy: News