தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருளின் விற்பனை அதிகரித்து வருவதாக சமீப நாட்களாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு முன்னர் கஞ்சாவின் தாக்கத்தால் குற்றங்கள் அதிகரித்த நிலையில், தற்போது போதை மாத்திரை மற்றும் ஊசி வடிவில் மீண்டும் போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளது. இந்த போதைப்பொருட்களுக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்களும் அடிமையாகியுள்ளது வேதனை அளிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிக்கும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருமங்கலத்தில் அமைந்துள்ள பிரபல வணிகவளாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு ஏசி வசதியுடன் 3 பார்களில் இரவு நேரங்களில் மதுவிருந்துடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் ஜோராக நடப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி பிரேசில் நாட்டை சேர்ந்த மந்த்திரா கோமரா என்பவரின் கேளிக்கை நிகழ்ச்சியும் மது விருந்தும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியர் பிரவீன் என்பவர் அளவுக்கு அதிகமான மதுபோதையால் உயிரிழந்தார். இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் மற்றும் பார் ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அங்குள்ள வணிக வளாகம் அருகில் இளைஞர் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அண்ணாநகர் துணை ஆணையர் சிவபிரசாத், திருமங்கலம் எஸ்.ஐ. சிவபிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தது. உடனே அவரை பிடித்து போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்று விசாரணை செய்தனர். அவரது பெயர் ஸ்ரீகாந்த் 28, என்பதும், இவர் கோட்டூர்புரத்தை சேர்ந்த 21 வயதான அப்துல்ஹமீத், கோடம்பாக்கத்தை சேர்ந்த 24 வயதான இளம் பெண் டோக்கஸ் உள்ளிட்டோருடன் இணைந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.