சென்னையில் மீண்டும் கொரோனா வார்டுகளாக மாறும் கல்லூரிகள்.!
அண்ணா பல்கலை வளாகம், சென்னை ஐ.ஐ.டி.யில் குருநானக் கல்லூரி, ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி, முகமது சதக் நர்சிங் கல்லூரி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனால் அரசு மீண்டும் கடந்த முறை செயல்படுத்தியது போன்று கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளது.
தற்போது வரை சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் காலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகம் எடுத்துள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் அது மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துளளனர். அதற்கு ஏற்றார் போன்று அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கல்லூரிகளை மீண்டும் கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஆயிரத்து 875 படுக்கைகளை தயார் செய்யும் வகையில் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாறப்போகிறது. அண்ணா பல்கலை வளாகம், சென்னை ஐ.ஐ.டி.யில் குருநானக் கல்லூரி, ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி, முகமது சதக் நர்சிங் கல்லூரி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் உள்ளது.
அது மட்டுமின்றி மேலும் பல்வேறு கல்லூரிகளை வார்டுகளாக மாற்றும் பணியில் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.