முதலமைச்சர், துணை முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து.!

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து.!

Update: 2021-01-13 11:22 GMT

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள், உழுது பயிரிட்டு வளர்த்து பாதுகாத்து அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி.. அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் மழை பொழிந்து மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் நடைபெற்றுவரும் கழக ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை..

சாதி மத வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன் பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய பொருட்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சிக் குரலில் இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். 

உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானதாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும் உழவர்களின் வருமானத்தை பெருக்கவும் பல்வேறு சீரிய திட்டங்களை மாண்புமிகு அம்மா அவர்களின் கழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட மாண்புமிகு அம்மா அவர்களின் கழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பையும் ரூபாய் 2500 ரொக்கத்தையும் தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது. 

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில் இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்! என்று மனதார வாழ்த்தி அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவரது வழியில் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Similar News