முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்வு வீடியோ பதிவுகள் ஆராயப்படுகின்றன - அண்ணா பல்கலை.!

முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்வு வீடியோ பதிவுகள் ஆராயப்படுகின்றன - அண்ணா பல்கலை.!

Update: 2020-10-19 14:11 GMT

அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை எழுதிய பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது பற்றி சமூக ஊடகங்களில் மாணவர்கள் புகார் செய்த நிலையில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களின் வீடியோ தொகுப்பு ஆராயப்பட்டு வருவதாகவும் அண்ணா பல்கலைகழகம் விளக்கமளித்துள்ளது.



கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பல்கலைக் கழக மானியக் குழுவும் ஏ.ஐ‌.சி.டி.ஈயும் இதற்கு ஒத்துக் கொள்ளாததால் பொறியியல் இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்கள் விதிவிலக்காக அமைத்தனர்.

இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பானது என்று அறிவித்ததை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக இறுதி ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான தேர்வுகளை கடந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்தது.

இந்த தேர்வில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை எழுதினர். இந்தத் தேர்வுகளில் பல்வேறு மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முறைகேடாக எழுதினர் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. ஒருவர் ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதும்போது அவர் பக்கத்தில் மற்றொரு மாணவரை வைத்துக்கொண்டு அந்த கேள்விகளுக்கான விடையை அவரிடம் கேட்டு தேர்வு எழுதியதாகவும், விடைகளை புத்தகங்களில் பார்த்து எழுதியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இன்னும் சில மாணவர்கள் தனி அறையில் அமர்ந்து எழுதாமல் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களிலும் டீக்கடை போன்ற இடங்களிலும் தேர்வுகளை எழுதிய வீடியோ இணையதளங்களில் பரப்பப்பட்டு வைரலானது. இந்நிலையில் தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.

இதில் தேர்வின் அருமை அறியாத முறைகேட்டில் ஈடுபட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு WH1 என்ற முடிவுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. WH1 என்றால் நீங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் உங்களின் வீடியோ பதிவுகள் ஆராயப்பட்டு வருகிறது என்று அர்த்தம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இவர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதியபோது எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பினை ஆராய்ந்த பிறகே வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Similar News