பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல் படிமங்களை பற்றிய ருசிகர தகவல்.!

பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல் படிமங்களை பற்றிய ருசிகர தகவல்.!

Update: 2020-10-26 07:49 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் ஆனைவாரி ஓடை செல்லும் வழியில், உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதி மக்கள் வண்டல் மண் எடுத்தபோது அப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் சிலவற்றின் படிமங்கள் பல்வேறு வடிவங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் உருண்டை வடிவிலான கல் படிமம் டைனோசர் முட்டை எனத் தகவல் பரவியது. எனவே, இவற்றை பார்வையிட பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் திரண்டனர்.



 

இந்த படிமங்களின் படங்களை பார்வையிட்ட புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜா கூறுகையில், "இவை டைனோசர் முட்டை அல்ல என ஏற்கனவே எனது முகநூல் நான் பதிவு செய்துள்ளேன். நான் பலமுறை இப்பகுதிக்கு சென்று வந்துள்ளேன். அங்கு கடல் வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன. டைனோசர் முட்டை இப்பகுதியில் எங்குமே கிடைத்ததில்லை. ஒரு சிறுபொருள் இருந்தால் அதைச் சுற்றி தாதுப்பொருட்கள் சேர்ந்து உருண்டையாக அல்லது முட்டை வடிவில் காட்சியளிக்கும். ஆனால், இவை முட்டைகள் அல்ல. இவற்றை டைனோசர் முட்டை என அழைப்பது தவறானது" எனக் குறிப்பிட்டு உள்ளார்.



அதனை அடுத்து மேலும், குன்னம் கிராமத்தில் உள்ள ஆனைவாரி ஓடையின் மையப்பகுதியில் பாறைகளுக்கிடையே புதைந்த நிலையில் காணப்பட்ட சுமார் 7 அடி நீளம் கொண்ட ஒரு கல் மர படிமத்தை சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் உள்ளிட்ட சில கிராம மக்கள் கண்டறிந்தனர். மேலும், இந்த ஓடை செல்லும் பாதையில் பல்வேறு கடல்வாழ் தொல்லுயிர்களின் கல் படிமங்களையும், சிறிய வகை கிளிஞ்சல்களையும் கண்டறிந்தனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா கூறுகையில், "சாத்தனூர் கல்மரம் கண்டறிப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர், அண்மைக்காலமாக சா.குடிக்காடு, கரம்பியம், குன்னம் என கடந்த 6 மாதங்களில் 3 புதிய கல்மர படிமங்கள் கிடைத்துள்ளன. சில கல் படிமங்களை அதே இடத்திலும், சிலவற்றை அதனருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்து, உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும். அப்போதுதான், நாம் வாழும் பகுதியின் புவியியல் முக்கியத்துவம் குறித்து அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

Similar News