தமிழகத்துக்கு அவப்பெயர் பெற்றுத் தந்தது தி.மு.க ஆட்சி.!
தமிழகத்துக்கு அவப்பெயர் பெற்றுத் தந்தது தி.மு.க ஆட்சி.!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு, நில அபகரிப்புப் புகார்கள், கட்டப் பஞ்சாயத்து போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை என தமிழகத்துக்கு அவப்பெயர்கள் தான் கிடைத்தன என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், "இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் செயல்பட்டு வரும் பப்ளிக் அபேர்ஸ் சென்டர் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி சிறந்த ஆட்சி நிர்வாகம் செய்யும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் ஸ்டாலின் அவர் மீது அவதூறு பரப்பும் விதமாக பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்" என்று கூறினார்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பெரும் ஆதரவு தருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் அ.தி.மு.க மற்றும் முதல்வர் பழனிச்சாமி மீது பொய்களை சுமத்தி வருகிறார் என்றும் பொய்களை கூறி வரும் ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் சிறந்த ஆட்சி நிர்வாகம் செய்யும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தமிழகம் இருளில் மூழ்கிக் கிடந்ததை நினைவு கூர்ந்தார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பு புகார்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மட்டுமே மாநிலத்தில் இருந்ததாகவும் அவை மாநிலத்திற்கு அவப்பெயர் வாங்கி தருவதாகவே இருந்தன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.