நிவர் போச்சு.. மீண்டும் ஒரு புயல்.. வானிலை மையம் தகவல்.!

நிவர் போச்சு.. மீண்டும் ஒரு புயல்.. வானிலை மையம் தகவல்.!

Update: 2020-11-27 14:00 GMT

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதனால் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. வேலூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.


கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க அரசு ஏற்பாடு செய்யும் என கூறினார்.


இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது வருகின்ற 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. அதற்கான சூழலை கண்காணித்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தற்போதைய நிலவரப்படி தென்தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.


இதனிடையே மீண்டும் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளது. நிவர் புயலில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்படவில்லை. அதே போன்று மீண்டும் செயல்படுத்த முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
 

Similar News