கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.!
18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசிகள் அதிகளவு போட இருப்பதால், ஏராளமான தடுப்பூசிகள் தேவை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகமாக உயர்த்தியது.
அதில் மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைக்கு ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்தது. இந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் தடுப்பூசியை இலவசமாக விநியோகம் செய்யுமாறு பிரதமருக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும், சீரம் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்நிலையில், தடுப்பூசி விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கொரனோ தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தற்போது 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசிகள் அதிகளவு போட இருப்பதால், ஏராளமான தடுப்பூசிகள் தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.