ராமநாதபுரம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் மரணம் !உறவினர்கள் சாலை மறியலால் பதற்றம்!
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ்த்தூவல் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் மேலதூவல் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்
இதனிடையே தனது நண்பரான சஞ்சய் உடன் நேற்று மாலை 4.30 மணிக்கு முதுகுளத்தூருக்கு வந்துள்ளார். அங்கு வாகன சோதனையில் இருந்த போலீசார் மணிகண்டனின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் மாணவன் பயத்தால் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டிப்பிடித்த போலீசார் மணிகண்டனை மட்டும் மேலதூவல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன் பின்னர் மாலை 6.30 மணியளவில் போலீசார் மணிகண்டனின் பெற்றோர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தங்கள் மகன் காவல் நிலையத்தில் இருக்கிறான் வந்து அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் மணிகண்டனை காவல் நிலையத்தில் சென்று பார்த்தபோது மிகவும் சோர்வாகவும், காயங்களுடன் இருந்துள்ளார். நடக்க முடியாமல் இருந்த மணிகண்டனை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டுக்கு சென்ற மணிகண்டன் 3 முறை ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் அப்படியே தூங்கிக்கொண்டிருந்த நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் இருப்பதை பெற்றோர்கள் பார்த்துள்ளனர். அவரை சோதித்து பார்த்தபோது ஆண் உறுப்பில் வீக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மணிகண்டனை போலீசார் அடித்து கொன்றதாக குற்றம்சாட்டினர். போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்துதான் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அரசு மருத்துவமனை வாயிலில் முதுகுளத்தூர் பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.