தி.மு.க அமைச்சர் பங்கேற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி! கொரோனா கட்டுப்பாடுகள் எங்கே ?
சமூக இடைவெளியின்றி கூட்ட நெரிசலுடன், பொது நிகழ்ச்சி ஒன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.
இதற்காக பெருந்திரளான மக்களை அப்பகுதி தி.மு.க'வினர் திரட்டினர். அவர்களில் பல வயதான ஆண்களும் பெண்களும் சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் ஒரே அரங்கில் அமர வைக்கப்பட்டதால், பெருந்தொற்று பரவ ஏதுவாக அமைந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சரே முகக் கவசம் அணியாமல் மேடையில் இருந்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பெருந்தொற்றின் மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், எந்தவித பெருந்தொற்று கட்டுப்பாடுகளும் இன்றி தி.மு.க அமைச்சர் பங்கெடுத்த நிகழ்ச்சி பேசுபொருள் ஆகியுள்ளது.