கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்.. மத்திய, மாநில அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை.!
மிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,652 ஆகவும் அதிகரித்திருப்பது அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. ஒரு மருத்துவராக நிலைமையின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா பெருந்தொற்று குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3.32 லட்சமாகவும், தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,652 ஆகவும் அதிகரித்திருப்பது அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. ஒரு மருத்துவராக நிலைமையின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமானால் அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பது எளிதில் கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல. மராட்டியம், உத்தரப்பிரதேசம், குஜராத், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மராட்டியத்தில் ஒவ்வொரு நாளும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும், மற்ற மாநிலங்களில் சராசரியாக 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மராட்டியத்தில் ஆக்சிஜன் வாயுக் கசிவால் 24 பேர் உயிரிழந்த துயரம் தீரும் முன்பே, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது வேதனையை அதிகரிக்கிறது.
தில்லியில் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்திருப்பதும், நிலைமை சமாளிக்க இராணுவ விமானங்களில் ஆக்சிஜன் சரக்குந்துகள் ஏற்றப்பட்டு தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும் நிலைமை எவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.
உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களும் இதை உணர்ந்து உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் ஆபத்தான சூழலை உணர்ந்து செயல்பட வேண்டும்.