கொரோனா மூன்றாம் அலை: குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு நியமனம் !
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 13 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் தற்சமயம் ஒரு சில மாநிலங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் இந்தியாவில் மூன்றாவதாக அலை உருவாகிவிட்டதா? என்பது போன்ற மருத்துவ ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் தற்போது தணிந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் தினசரி சராசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மூன்றாவது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Image courtesy: uniindia