ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்.!
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்.!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுவை மீட்டுத் தந்த அதிமுக அரசுக்கும், பெற்று தருவதற்காக போராடிய மாணவ, மாணவிகளுக்கும், அனைத்து தமிழ் மக்களும் நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த போட்டியானது சிவகங்கை மாவட்டம், கண்ணங்கோட்டை காரைக்குடி சாலையில் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தை கொடி அசைத்து அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பிஆர்.செந்தில்நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தேவகோட்டை ஒன்றியக்குழு தலைவர் பிர்லாகணேசன், முன்னாள் காரைக்குடி எம்.எல்.ஏ., பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழா ஏற்பாட்டினை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டில் 15 வண்டிகளும் சின்ன மாட்டில் 25 வண்டிகளும் கலந்து கொண்டன. சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டன. பெரியமாடு வண்டிக்கு 7 மைல்கள், சின்னமாடு வண்டிக்கு 5 மைல் தூரம் சென்று வரவேண்டும். பெரியமாட்டில் முதலாவதாக நகரம்பட்டி கண்ணன் இரண்டாவதாக தானவயல் வெங்கடாசலம் மூன்றாவதாக கல்லல் உடையப்பா உள்ளிட்டோர் வந்தனர்.
வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்க பணமும், குத்து விளக்குகள், கேடையங்களும் வழங்கப்பட்டது. இப்போட்டி நடைபெற்ற சாலையின் இருபுறமும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தைதட்டி மகிழ்ந்தனர்.