தீபாவளி பண்டிகை.. பூக்கள் விலை கடும் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி.!

தீபாவளி பண்டிகை.. பூக்கள் விலை கடும் உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி.!

Update: 2020-11-13 14:23 GMT

இந்துக்கள் பண்டிகையான தீபாவளி நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைவரும் புதிய ஆடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவர். மற்றொரு புறம் தீபாவளி அன்று இந்துக்கள் அனைவரும் நோம்பு இருந்து கடவுளுக்கு வழிபடுவர். இதனையொட்டி பூக்கள் வாங்குவதற்காக இன்று காலை முதல் பலர் மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்.


மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூ.2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தேவை அதிகரித்து பூக்கள் வரத்து குறைவானதால் பூக்களின் விலை 7 மடங்கு உயர்ந்துள்ளது.


மதுரை சந்தைக்கு, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் உள்ள மற்ற இடங்களுக்கு மொத்தம் மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாக உள்ளதால் தீபாவளி பண்டிகைக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக 80 முதல் 100 டன் வரை பூக்கள் வரத்து இருந்து வந்தது. தற்போது 50 டன் பூக்கள் மட்டுமே வருகிறது. இதனால் பூக்களின் விலை கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பல மடங்கு உயர்ந்துள்ளது.


இதனால் விவசாயிகளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும், வாங்குபவர்களுக்கு சற்று விலை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு நிதி சுமை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News