தமிழகத்தில் ஒருவாரம் அறிவியல் திருவிழா: மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அறிவியல் திருவிழா நடைபெறும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. வருடம்தோறும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் சுமார் ஒருவாரத்திற்கு அறிவியல் திருவிழா தமிழகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி டி.வி.வெங்கடேசன் கூறியதாவது: சர்.சி.வி. ராமன் தனது புகழ்மிக்க 'ராமன் விளைவு' பற்றி கடந்த 1928ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி உலகிற்கு அறிவிக்கப்பட்ட நாளாகும். அவருடைய கண்டுப்பிடிப்புக்கு 1930ம் ஆண்டு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ளும் நிலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75ம் ஆண்டு பெருவிழாவை கொண்டாடி வருகின்ற நிலையில், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பாக ஒரு வாரகாலம் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் உள்ளதோ அனைத்தும் இதில் இடம் பெறும். அடுத்த 25 ஆண்டுகளில் அறிவியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதையும் அறிந்து கொள்வதற்கு இக்கண்காட்சியில் இடம்பெறும். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அறிவியல் திருவிழா கடைப்பிடிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: University Of Victoria