காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.. தென்மாவட்டங்களில் கனமழை.!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.. தென்மாவட்டங்களில் கனமழை.!

Update: 2020-12-01 09:00 GMT

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று (நேற்று) காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 1ம் தேதி (இன்று) காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2ம் தேதி (நாளை) மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்கிறது. இது குமரி கடல் பகுதியில் 2 நாட்கள் நிற்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக 1ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


2ம் தேதி (நாளை) தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய அதிக கன மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.


இந்த கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். வரும் 3ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிக கன மழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News