தருமபுரி: முழுஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் சுற்றித்திரியும் பொதுமக்கள்.!
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கை மதிக்காமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிந்து வருவதை பார்க்க முடிகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கை மதிக்காமல் பொதுமக்கள் வெளியில் சுற்றித்திரிந்து வருவதை பார்க்க முடிகிறது. தமிழக அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் செல்வதை காண முடிகிறது. போலீசார் எச்சரிக்கை செய்தாலும் பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. வைரஸ் தொற்றின் 2வது அலை தருமபுரியில் தற்போதுதான் அதன் கோர முகத்தை காட்டத்துவங்கியுள்ளது. தருமபுரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதே சமயம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வெளியில் செல்பவர்களை எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் போலீசார் சொல்வதை மீறியும் பொதுமக்கள் வெளியில் சுற்றி வருகின்றனர். அந்த வகையில், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம் நகர் பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது 12 மணிக்கு மேல் ஆகியும் வாகனங்களில் வந்து கொண்டேதான் உள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை பொருட்டாக எடுத்துகொள்ளமால் இருக்கின்றனர். மேலும் ஊரடங்கை மீறிய வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு கொரோனாவால் ஏற்படும் இறப்பு மற்றும் அதனால் ஏற்படும் அபாயத்தை பொதுமக்களிடையே காவல்துறையினர் விளக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.