கதிரவன் வாசலை மிதிக்க துணிந்து விட்டாரா கருப்பு எம்ஜிஆர்? ச்சுட.. ச்சுட சூடான தகவல்கள்.!

கதிரவன் வாசலை மிதிக்க துணிந்து விட்டாரா கருப்பு எம்ஜிஆர்? ச்சுட.. ச்சுட சூடான தகவல்கள்.!

Update: 2020-12-15 09:46 GMT

உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் கடந்த 2008 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட மூன்றாம் ஆண்டில்அக்கட்சி நடத்திய மகளிர் அணி பொதுக் கூட்டம் ஒரு மாநாடாகவே காட்சி அளித்தது.

தமிழ்நாட்டில் இது வரையில் எந்த அரசியல் கட்சியும் மகளிரை மட்டும் வைத்து இவ்வளவு சிறப்பாக மாநாடு போன்று நடத்திய வரலாறு கிடையாது. பெண்கள் தங்களுடைய வீட்டு வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் என்னுடைய அழைப்பை ஏற்று மாநாட்டில் பல லட்சக்கணக்கில் கலந்து கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றார் அன்று விஜயகாந்த்.

அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. ஏராளமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் திமுக மீது வைக்கப்பட்ட காலம். அக் குற்றச்சாட்டுகளை ஒரு பக்கம் அதிமுக தலைவர் ஜெயலலிதாவும், இன்னொரு பக்கம் விஜயகாந்தும் சிறப்பான முறையில் மக்களிடையே கொண்டு சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்.

ஒரு பக்கம் திமுகஅதிமுக மீது பதிலுக்கு ஊழல் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்த போது, மாசற்ற தலைவராக தமிழக அரசியலில் விஜயகாந்த் உலா வந்த நேரம். தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், ஆதிவாசிகள் வாழும் சின்னஞ்சிறிய கிராமங்களில் கூட தேதிமுக கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்த காலம் அது. விஜயகாந்த் மீது ஏராளமான எதிர்பார்ப்புகளை தமிழக புதிய தலைமுறையினர் வைத்திருந்த நேரம் அது. அதிமுக, திமுக இரண்டுக்கும் சரியான மாற்றுக் கட்சியாக தேதிமுக தன்னை பறை சாற்றிக் கொண்ட காலம்.

இந்நிலையில் துக்ளக் சோ போன்ற மத்தியஸ்தர்களின் தலையீட்டால் 2011 சட்ட சபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக - தேதிமுக கட்சிகள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. 203 இடங்களை அக்கூட்டணி வென்று பிரம்மாண்ட சாதனை படைத்தது.

2006 ஆம் ஆண்டு பாமக கோட்டையான விருத்தாச்சலத்தில் வென்றது மிகப்பெரிதாக பார்க்கப்பட்டது. அதற்கு முன்பு 2011 – ல் ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக நின்று தமிழகத்தில் அதிக வித்தியாசத்தில் அவர் பெற்ற வெற்றி, அவரைப் பார்த்து மலைக்க வைத்தது.

30 க்கும் மேற்பட்ட எம்எல்ஏ க்களுடன் சட்டசபைக்கு சென்று, எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த் உச்ச நிலைக்கு சென்றார். அதன் பிறகு அவருடைய உடல் நலம் மற்றும் இரு கட்சி தலைவர்களிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சினைகள் அவருக்கு அடுத்தடுத்த அரசியல் சறுக்கலை ஏற்படுத்தின.

என்றாலும் அடுத்து நடைபெற்ற 2016 தேர்தலில் தேமுகவை திமுக வா..வா.. என்று அழைத்தது. அவர் பிடி கொடுக்காத நிலையிலும் விஜயகாந்த் என்ற பழம் நழுவி மீண்டும் என் பாலில் விழுந்து விட்டது என்றெல்லாம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கையாக பேசி விஜயகாந்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

ஆனால் தனித்து நிற்பது ஒன்றே சரியானது என வைகோ, கம்யூனிஸ்டுகள்  அளித்த மோசமான யோசனையால் மூன்றாம் அணி அமைத்து கடைசியில் பரிதாபமான நிலையை சந்தித்தது தேமுதிக. அதுவும் அக்கட்சிக்கு அதிக செல்வாக்குள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் தலைவர் விஜயகாந்தே வெற்றி வாய்ப்பை இழந்தது தேதிமுக தொண்டர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அந்த தேர்தலில் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் தேமுதிக மீண்டும் 30 இடங்களுக்கு மேல் பெற்றிருக்கும் என்றும், திமுகவும் தேமுதிக ஆதரவால் கூடுதல் இடங்களை பெற்று ஆட்சி அமைத்திருக்கும் என்றும் இன்றும் விஜயகாந்த் அனுதாபிகள் அழாத குறையாக பேசி வருகிறார்கள். அதன்பிறகு நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியில் இருந்தும் தேமுதிகவால் சோபிக்க முடியவில்லை.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை உறுதிப்படுத்தப்பட்டதும் அதனால் அதிக பாதிப்புக்கு தேமுதிக உள்ளாகும் எனக் கூறப்படும் நிலையில் அக்கட்சி அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளிடம் இரகசிய பேரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அதிமுகவை விட கூடுதல் சீட்கள் அளித்தால் திமுகவே சிறப்பானது என தேமுதிக கருதுவதாக தெரிகிறது. என்றாலும் ரஜினியின் கட்சி தொடக்கம், அவருடன் இணையப்போகும் கட்சி விவரங்கள் தெரிந்து கொண்டு அதன் பின் கூட்டணி முடிவு குறித்து பேசிக் கொள்ளலாம் என இரு பெரிய கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயகாந்த் சென்ற 12 - ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். அதில் கூட்டணி குறித்த முடிவு வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக  பிரேமலதா கூறியுள்ளார்.

மேலும் அதிமுக அரசு உடனே டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்றும், மத்திய அரசு உடனடியாக விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கூறியுள்ளார். இது தற்போது நாங்கள் தேசீய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்பதைமறைமுகமாக  உணர்த்துவதாகவும், திமுகவுக்கான பேச்சு வார்த்தை கதவுகள் திறக்கப்படுவதற்கான சமிக்ஞை என்றும் பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் அதிமுக கூட்டணியில் இப்போதுவரை நீடிப்பதாகவும் பிரேமலதா கூறுகிறார். ஆகவே ஜனவரியில்தான் முடிவு தெரியும் என்கிறார்கள்.

எது எப்படியோ இந்த முறை ஆட்சியமைப்போர் களத்தில் பல முனை போட்டிகளை சமாளிக்க வேண்டியும் வரலாம். எனவே மிகச்சிறிய வாக்கு வங்கிகளையும் பெரிய கட்சிகளால் புறக்கணிக்க முடியாது. இந்நிலையில் தேதிமுக சரியான முடிவை மிக சரியாக எடுக்க வேண்டிய நேரமிது.

இப்போது கூட்டு, சீட்டு, நோட்டு, மட்டும் முக்கியமல்ல,அதிகாரத்திலும்  பங்கும் முக்கியம், அப்போதுதான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற மனநிலையுடன் உள்ள பாமக போல, தேமுகவும் கருதுவதாக கூறப்படுகிறது.

இதில் பாமகவை காட்டிலும் தேமுதிகவுக்கு திமுக முக்கியத்துவம் தரலாம் என கூறுகிறார்கள். அதே சமயம் சென்ற வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பலர் திமுகவுடனான கூட்டையும் வலியுறுத்தியுள்ளதாக கூறபபடுகிறது. எனவே விஜயகாந்த் இதுநாள் வரை புறக்கணித்து வந்த கதிரவன் வாசலையும் மிதிக்க துணிந்து விட்டதாகவே கூறபபடுகிறது.   

இந்நிலையில் ரஜினி வருகை உறுதியானதால் இந்த பேரத்தை முன்வைக்க இதுதான் சரியான நேரமாக அவை கருதுகின்றன.

வரும் 2021- ஜனவரி மாதம் புத்தாண்டை  மட்டும் கொண்டு வரவில்லை,இதற்கு முன் எப்போதும் காணாத பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளையும் அது உடன் கொண்டு வரப்போவதாக கூறப்படுகிறது.

Similar News