'ம.பொ.சி, கடலூர் அஞ்சலையம்மாள், நாகப்ப படையாட்சி' இவர்களின் சிலைகள் எங்கே?- மருத்துவர் ராமதாஸின் சாட்டையடி கேள்விகள் !
"நாகப்ப படையாட்சி, கடலூர் அஞ்சலையம்மாள், ஆதிகேசவ நாயக்கர், மற்றும் ம.பொ.சி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் எதற்கும் சளைத்தவையல்ல" என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழக அரசின் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக் குறித்து விமர்சித்துள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று எழுபத்தி மூன்றாவது குடியரசு தினத்தை ஒட்டி, தமிழக அரசு சென்னையில் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பறைசாற்றும் வகையில், அலங்கார ஊர்திகள் உலா வந்தன.
அந்த அலங்கார ஊர்தியில், முக்கியமான தியாகிகளின் சிலைகளுக்கு மத்தியில், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத ஈ.வே.ராமசாமியின் சிலையும் இடம்பெற்றது.
சுதந்திர போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாதவரின் சிலையை இடம்பெற வைத்து, சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்த தியாகிகளை கௌரவிக்க தி.மு.க அரசு தவறி விட்டதா? அல்லது வேண்டுமென செய்ததா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இது குறித்து தனது கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் அவர் கூறியதாவது: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல.
தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவர் ராமதாஸின் சாட்டையடி கேள்விகளுக்கு, தி.மு.க அரசு தக்க பதில் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.