வின்னை முட்டும் முருங்கை விலை! கிலோ ரூ.300க்கு விற்பனையால் பொதுமக்கள் அவதி!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் வருவது வழக்கம். கடந்த மாதம் முதல் பெய்த பருவமழையால் ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் விளை நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் தமிழக சந்தைகளுக்கு வரும் காய்கறிகள் கிடுகிடுவென குறைந்தது. இதனால் குறைந்த அளவிலான காய்கறிகள் சந்தைக்கு வரத்து இருப்பதால் விலையும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் தக்காளி வரத்து குறைந்ததால், கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பல குடும்பங்கள் தக்காளி இல்லாமல் சாம்பார் வைத்த செய்திகளையும் அறிந்திருப்போம். இதனிடையே சென்னைக்கு நேற்று (டிசம்பர் 7) 1,110 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் கிலோ ரூ.90 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனைகூட வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்கி சென்றதையும் பார்க்க முடிகிறது.
அதே போன்று சென்னைக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, பெரம்பலூர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் முருங்கைக்காய் வருவது உண்டு. ஆனால் தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மட்டுமே முருங்கை சீசன் உண்டு. இதனால் வடமாநிலம் மகாராஷ்டிராவில் இருந்து 500 கிலோவும், குஜராத் மாநிலத்தில் இருந்து 6 டன் அளவுக்கு மட்டுமே முருங்கைக்காய் வந்தது. இதனால் கிலோ ரூ. 270 முதல் ரூ.300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. முருங்கைக்காய் இருக்கும் கடை பக்கமே ஏழை மக்கள் போக முடியாத அளவிற்கு விலை வின்னை முட்டி வருகிறது. திமுக அரசு காய்கறிகளை வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக வாங்கி குறைந்தளவு விற்பனை செய்தால் மட்டுமே சாதாரண மக்கள் காய்கறிகளை வாங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy:India Mart