பறவைக் காய்ச்சல் எதிரொலி.. நாமக்கல் ஆட்சியர் ஆலோசனை.!

பறவைக் காய்ச்சல் எதிரொலி.. நாமக்கல் ஆட்சியர் ஆலோசனை.!

Update: 2021-01-06 10:06 GMT

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் கோழிகள் மற்றும் வாத்துகள் செத்து மடிந்தன. இதில் அவை “எச் 5 என் 8” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவைக்காய்ச்சலால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பறவைக்காய்ச்சலை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது.

அது மட்டுமின்றி கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க அங்கிருந்து கோழி, மற்றும் முட்டைகள், தீவணங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஆட்சியர் மெகராஜ் தலைமையிலான கூட்டத்தில் கோழிப்பண்ணையாளர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் பறவைக் காய்ச்சல் தொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை பற்றி விவரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News