விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு.. சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு.!

விதிமுறை மீறி பட்டாசு வெடிப்பு.. சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு.!

Update: 2020-11-15 10:58 GMT

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே போன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க விதிமுறை விதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், அரசின் உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை மாநகரில் மட்டும் 348 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலை நேரத்தில் பட்டாசு வெடித்தபோது சுமார் 25 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். காலையிலிருந்து 57 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், பெரம்பூரில் ராக்கெட் பட்டாசு வெடித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று புதுச்சேரியில் தடையை மீறி பட்டாசு வெடித்த 28 பேரும், டெல்லியில் 55 பேரும், 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், டெல்லியில் காற்று மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

Similar News