கோவையில் எஸ்.பி.பிக்காக உருவாகும் வனம்..!

கோவையில் எஸ்.பி.பிக்காக உருவாகும் வனம்..!

Update: 2020-12-09 12:00 GMT

உலகில் உள்ள அனைத்து இசை பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று சென்றவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவரது நினைவாக ‘சிறுதுளி’ அமைப்பின் முயற்சியால் கோவையில் எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்படுகிறது. இதற்கான விழா நாளை நடக்கிறது.

கோவையில் இயற்கை சூழ்ந்த காலநிலையை மீட்கவும், புதுப்பிக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ள அனைவரும் ஒன்றினைந்து ‘சிறுதுளி’ அமைப்பாக உருவெடுத்தது. நீராதாரங்களை பாதுகாப்பது, காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பது மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மையை நடைமுறைப்படுத்துவதை, முக்கிய குறிக்கோளாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்ற கடைசி காணொலி இசை நிகழ்ச்சியின்போது, ‘கோவிட் என்பது அன்னை பூமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு நாம் செலுத்தும் விலையே என்று குறிப்பிட்டிருந்தார். அன்னைக்கு நாம் இழைத்த பாதகத்தை மேலும் தொடராமல், இசைப்பிரியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட கேட்டுக் கொண்டார்.

அவரது வேண்டுகோளை செயல்படுத்தும் வகையில், ‘சிறுதுளி’ அமைப்பு பேரூர், செட்டிபாளையம் ஊராட்சியுடன் இணைந்து, நாளை காலை, 10:30 மணிக்கு, பச்சாபாளையம், ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில் எஸ்.பி.பி., வனம் அமைக்கிறது. இவ்வுலகில் வாழ்ந்த, 74 ஆண்டுகளை நினைவுபடுத்தும் வகையில், 74 மரங்களை உள்ளடக்கிய நகர்ப்புற வனம் உருவாக்குகிறது.

இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.பி., வனத்தை திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக, ‘கிரீன் கலாம்’ நிறுவனரும் நடிகருமான விவேக் பங்கு பெறுகிறார். இது போன்ற செயல்களால் எஸ்.பி.பி., என்றும் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்பது மாற்றுக்கருத்தில்லை.

Similar News