கோவையில் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு.. மற்றொருவர் படுகாயம்.!
கோவையில் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு.. மற்றொருவர் படுகாயம்.!
கோவை அருகே காட்டுயானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் நேற்றிரவு 2 யானைகள் புகுந்துள்ளது. இதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் நேற்று இரவு முதல் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 6 மணியளவில் இரு யானைகள் பிரிந்து வனப்பகுதியை நோக்கி சென்றன. அப்போது அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டி வயல் வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காட்டுயானை பலமாக தாக்கியுள்ளது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அந்த யானை தோட்டப்பகுதியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராணியம்மாள் என்ற மற்றொரு மூதாட்டியையும் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியினர் பட்டாசுகளை வெடித்தும், சத்தம் எழுப்பியும், யானையை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினரும், போலீசாரும் பாப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த ராணியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது: வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் போதே அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.