தொடரும் கனமழை.. வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர் பகுதிகள்.!

தொடரும் கனமழை.. வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர் பகுதிகள்.!

Update: 2020-11-17 08:48 GMT

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமாக சென்னையில் இருந்து வருகிறது. இதேநிலை தான் தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் தவித்து வந்த மக்கள், மழையால் தீபாவளி கொண்டாட்டம் தடைபடுமோ? என்று பயந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகை தினத்தன்றும், அதற்கு முந்தைய தினத்திலும் சென்னையில் சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கியது. இதனால் தீபாவளி விடுமுறை முடிந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சென்னையை சுற்றி உள்ள தாம்பரம், முடிச்சூர், காட்டங்கொளத்தூர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. சென்னையை அடுத்து காட்டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள  செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையூர்,புக்காத்துறை, கொளப்பாக்கம், தாத்தனூர், உட்பட 14 ஏரிகளும் தொடர் மழையால் நிரம்பி உள்ளன.

அந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலப்பதால் அடையாற்றிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. சென்னை நகரின் ஊடாக ஓடும் அடையாறில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரத்தில் இருப்போர் பாதுகாப்பாக இருக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடையாறு பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆகாய தாமரை படர்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவானது. இதையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஆகாயதாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Similar News