அரியலூர் மாவட்டத்தில் டீக்கடையில், சாக்குமூட்டைக்குள் வைக்கப்பட்ட 5 சிறிய சாமி சிலைகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக சாமி சிலைகள் தாக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில். ஜெயங்கொண்டம் மாவட்டத்திலுள்ள கல்லாத்தூர் கிராமத்தில், 38 வயதுடைய வேல்முருகன் தேனீர் கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை வழக்கம்போல் இரவில் கடையை பூட்ட முயற்சித்தபோது, தேநீர் பருகுபவர்கள் அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலிக்கு இடையில் சாக்குப்பை கிடந்துள்ளது. இதைக்கண்ட வேல்முருகன் அதிர்ச்சியுற்றார்.
பின்னர் சாக்குப் பையை பிரித்து பார்த்ததில் செம்பு உலோகத்திலான 5 சாமி சிலைகள் இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியுற்றார். உடனடியாக இத்தகவலை ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சாக்குப் பையை நன்கு ஆராய்ந்தனர். அதில் சிறிய அழகிய 12 சென்டி மீட்டர் உயரமுள்ள கருடபகவான் சிலை, அதே அளவுள்ள அம்மன் சிலை, 8 சென்டி மீட்டர் உயரமுள்ள பெருமாள் சிலை, 6 சென்டி மீட்டர் உயரம் உள்ள நடராஜர் சிலை, ஐந்து சென்டி மீட்டர் உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை மற்றும் ஒரு தூபகாள் இருப்பதும் தெரியவந்தது.
இத்தகவல் திருச்சி சிலை தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மீட்கப்பட்ட சிலைகளை கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார் அதன்படி ஜெயங்கொண்டம் காவல்துறையினர் ஜெயங்கொண்டம் கருவூலத்தில் அனைத்து சிலைகளையும் ஒப்படைத்தனர்.
இந்த மீட்கப்பட்ட சிலைகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.